பெண் சிசுவை கொன்ற இளம்பெண் கைது :

பெண் சிசுவை கொன்ற இளம்பெண் கைது :
Updated on
1 min read

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு அருகே உள்ள கழிப்பறையில் தண்ணீர் அடைப்பு ஏற்பட்டது.இதனால், டிச.4-ம் தேதி கழிப்பறையை சுத்தம் செய்ய சென்ற பணியாளர்கள், தண்ணீர் தொட்டி இணைப்பை திறந்து பார்த்தனர்.

அதில் பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு சடலம் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொப்புள் கொடி கூட அறுக்காமல் இருந்ததால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டு இல்லாத நிலையில், அந்த குழந்தை வெளியில் எங்காவது பிறந்து அதை இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என மருத்துவக் கல்லூரி போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும், அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், பெண் ஒருவர் சந்தேகம்படும்படி அந்த பகுதியில் நடமாடியது தெரியவந்தது. இதனால், இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் தலைமையிலான போலீஸார், தஞ்சாவூர், கல்யாணபுரம், திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், குழந்தையை கழிப்பறை தண்ணீர் தொட்டியில் போட்டுச் சென்றது, தஞ்சாவூர் அருகே உள்ள ஆலக்குடியைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகள் பிரியதர்ஷினி(23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தகாத உறவால் கர்ப்பமானதால், யாருக்கும் தெரியாமல் குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவு செய்த பிரியதர்ஷினி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலி என சிகிச்சைக்காக வந்து இருப்பதாகக் கூறி, அங்கு தங்கி விட்டு, கடந்த 3-ம் தேதி இரவு கழிப்பறையில் குழந்தையை பெற்று, அங்கேயே கொன்று கழிப்பறை தொட்டிக்குள் போட்டு விட்டுச் சென்றது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in