

சீரான குடிநீர் வழங்கக் கோரி, ஊத்தங்கரை அருகே பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பெண்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை கல்லாவி- ஊத்தங்கரை சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீரான குடிநீர் வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அச்சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.