

அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலகவுண்டம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மானத்தி செலம்பாகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மீது வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் (56) என்பவரிடம் கூறியுள்ளார்.இதற்கு அவர், தனக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்து நிர்பந்தம் செய்துள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத செல்வகுமார் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அளித்த அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை நேற்று காலை மானத்தி கிராமத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளரிடம் செல்வகுமார் வழங்கியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையிலான போலீஸார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகத்தை பிடித்தனர். லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.