

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. வரும் ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதுதவிர, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உட்பட திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
இதுபற்றி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து நேற்று காலை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன பேரணி தொடங்கி, டதி பெண்கள் பள்ளியில் நிறைவடைந்தது. இதனை, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர், தேர்தல் வட்டாட்சியர் சுசீலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.