Published : 05 Dec 2021 04:08 AM
Last Updated : 05 Dec 2021 04:08 AM

மழையால் பூக்களுக்கு தட்டுப்பாடு: மல்லிகை விலை கிலோ ரூ. 1,500 :

தொடர் மழையால் கடந்த 3 வாரங்களாக தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இச்சந்தைக்கு சராசரியாக 40 டன் பூக்கள் வெளியூர்களில் இருந்து வரும். தற்போது, மதுரை,சத்தியமங்கலம், உதகை, கொடைக்கானல், ஓசூர், சங்கரன்கோவில், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பூந்தோட்டங்கள் மழையால் அழிந்துள்ளன. தப்பிய தோட்டங்களில் பூக்கள் மகசூல் குறைந்துள்ளது.

இதனால், தினசரி 5 டன்னுக்குள் மட்டுமே பூக்கள் வரத்தாகிறது. அதேநேரம், கார்த்திகை மாதம்திருமணம் உட்பட சுபமுகூர்த்த நிகழ்ச்சிகளுக்கும், சபரிமலை உட்பட கோயில் விழாக்களுக்கும் பூக்கள் அதிகளவில் தேவைப்படுகிறது. தேவைக்கு பூக்கள் இல்லாததால் தோவாளை மலர்ச் சந்தையில் காலை 9 மணிக்குள் அனைத்துபூக்களும் விற்று தீர்ந்து விடுகின்றன. திருமணம், மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் தலையில் சூடும் மல்லிகை, பிச்சி பூக்கள்கிடைக்காமல் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த ஒரு வாரமாக மல்லிகைப் பூ கிலோ 1,000 ரூபாய்க்கு மேல்விற்பனையாகிறது. நேற்று ஒருகிலோ மல்லிகைப் பூ ரூ.1,500-க்குவிற்பனையானது. அதற்கு மேல்விலை கொடுக்க வாடிக்கையாளர்கள் தயாராக இருந்தபோதும் பூக்கள் கிடைக்கவில்லை.

பிச்சி கிலோ ரூ.1,300, கிரேந்தி ரூ.120, சம்பங்கி ரூ.170, அரளி ரூ.400-க்கு விற்பனையானது. பூ மகசூல் குறைவாகவே உள்ளதால், இதேநிலை இந்த மாதம் இறுதிவரை நீடிக்க வாய்ப்புள்ளது என மலர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x