Published : 05 Dec 2021 04:08 AM
Last Updated : 05 Dec 2021 04:08 AM
திருவிசநல்லூர் தரஐயவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான நேற்று கங்காவதரண மகோற்சவ நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தவர் தர ஐயவாள். இவர் தன் தந்தையாருக்கு நீத்தார் கடனைச் செலுத்துவதற்காக புரோகிதர்களை வரவழைத்தார். சடங்குகள் முடிந்த பிறகு, அவர்களை நீத்தாராக பாவித்து, உணவிட்ட பிறகுதான் குடும்பத்தில் உள்ளவர்கள் பசியாற வேண்டும்.
ஆனால், அந்த நேரத்தில் ஐயவாள் வீட்டு வாசலில் ஒருவர் பசியால் சுருண்டு விழுந்து கிடந்ததை பார்த்த ஐயவாள், உடனே வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துச் சென்று, பசியால் மயங்கிக் கிடந்த நபருக்கு ஊட்டிவிட்டார். இதனால், ஆத்திரமடைந்து ஐயவாளை சபித்த புரோகிதர்கள், அங்கு தீட்டு பட்டுவிட்டதாகவும், கங்கைக்குச் சென்று நீராடி வந்தால் தான் சரியாகும் என்றும் ஐயவாளிடம் கூறினர்.
இதையடுத்து, கங்கை நதிக்குச் சென்று நீராடி வர பல மாதங்களாகும் என்பதால், அதுவரை தந்தையின் பிதுர்கடன் தீராமல் இருக்குமே என்று கடவுளை நினைத்து ஐயவாள் வேண்டினார். அப்போது, அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்கியது. இந்த நீர் தெருவெங்கும் ஓடி, அங்குள்ள வீடுகளை சூழ்ந்தது. இதையடுத்து, பொதுமக்கள் கேட்டுக்கொண்டதால், கங்கை நீரை ஐயவாள் கட்டுப்படுத்தினார்.
இந்த நிகழ்வுகள் கார்த்திகை அமாவாசையன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, திருவிசநல்லூரில் உள்ள தரஐயவாள் மடத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று கங்காவதரண மகோற்சவம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நேற்று அதிகாலை 4.30 மணி முதல் புனித நீராடல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நீராடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT