Published : 05 Dec 2021 04:08 AM
Last Updated : 05 Dec 2021 04:08 AM

புதூர் அருகே கால்வாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர் :

புதூர் அருகே முத்தலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டூர், நம்பிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழநம்பிபுரம், மேலநம்பிபுரம், பொன்னையாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் நிலங்களில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டனர். இந்த நிலங்களில் நம்பிபுரம் கண்மாய் தண்ணீரை நம்பியேவிவசாயம் நடந்து வருகிறது.

தற்போது பெய்த மழையில் நம்பிபுரம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன் கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாயில் கீழ்நாட்டுக்குறிச்சி அருகே உடைப்பு ஏற்பட்டது. இதனால் கண்மாய்க்கு வரும் தண்ணீர்வீணாக வெளியேறி வைப்பாற்றுக்கு செல்கிறது. இதை பார்த்துவிவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிறு, குறு விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த முனியசாமி கூறும்போது, ‘‘கோவில்பட்டி, கடலையூர், உருளைக்குடி, கருப்பூர், தோள்மாலைபட்டி, வீரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்கள்நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் நம்பிபுரம் கண்மாய்க்கு வந்து சேர்கிறது. நம்பிபுரம் கண்மாய் கடந்த 1968-ம் ஆண்டு தூர்வாரப்பட்டது. அதன் பின்னர் தூர்வாரப்படவில்லை. சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கண்மாய் முழுவதும் மணல் மேடாகிவிட்டதால், மழை பெய்து, கண்மாய்க்கு வரும் தண்ணீர் முழுவதும் அருகே உள்ள நிலத்துக்கு சென்று பயிர்களை பாழ்படுத்தி விடுகிறது.

தற்போது வரத்து கால்வாயில் சுமார் 15 மீட்டர் அளவுக்கு ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக தண்ணீர் வைப்பாற்றை நோக்கி பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, நம்பிபுரம் கண்மாயை தூர்வாரி, சீமை கருவேல மரங்களை அகற்றவேண்டும். கண்மாய்க்கு வரும் வரத்து ஓடைகளின் கரைகளை பலப்படுத்த வேண்டும். முத்தலாபுரம்,நம்பிபுரம் ஊராட்சி பகுதிகளில் மழையால் சேதமடைந்த பகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x