

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றம் வர மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் நூற்றாண்டு மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில் 56 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14,29,000 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைபுரிந்த மருத்துவர்களை ஊக்குவிக்கும் விதமாகநினைவுப்பரிசுகளும் வழங்கப் பட்டன.
அதைத்தொடர்ந்து ஆட்சியர்பேசுகையில், "மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி ஸ்கூட்டர்கள் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நேர்காணலில் விண்ணப்பிக்காதவர்கள், டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ள நேர்காணலுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கியல் மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு நலத்திட்டஉதவிகள் கோரி மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். முறையாக நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றம் வர மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்" என்றார்.
இவ்விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.