

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே வரண்டியவேல் தரைப்பாலத்தில் 7 நாட்களாக தண்ணீா் வடியாத நிலையில் மாநில பேரிடா் மீட்புபடையினர் பாதுகாப்பில் தூத்துக்குடி- திருச்செந்தூர் இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக ஆத்தூர், குரும்பூர், ஆறுமுகனேரி பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி உபரிநீர் கால்வாய்கள் வழியாக பாய்கிறது. தாமிரபரணி பாசனப் பகுதியில் பெரிய குளமான கடம்பாகுளம் கடந்த மாத தொடக்கத்திலேயே நிரம்பியது. இதனால் உபரிநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
கடம்பாகுளத்தில் இருந்து வரும் உபரிநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் ஆத்தூரை அடுத்த தண்ணீர்பந்தல் வரண்டியவேல் தரைப்பாலத்தை மூழ்கடித்தது. சாலைக்கு மேல் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீா் பாய்ந்தது. 7-வது நாளாக நேற்றும் சாலையில் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் சென்றது.
ஆறுபோல தண்ணீர் ஓடுவதால் 2 நாட்கள் மட்டும் இந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு பாதுகாப்புடன் வாகனங்கள் இந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன பாதுகாப்புப் பணியாளர்கள் 24 மணி நேரமும் வரண்டியவேல் பாலத்தை கண்காணித்து வாகனங்கள் கடந்து செல்ல உதவி வருகின்றனர்.
இந்த தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. வழக்கமாக குறைந்த அளவில் தண்ணீர் செல்லும். இதனால் வாகனப் போக்குவரத்துக்கு தடை ஏற்படுவதில்லை. இந்த ஆண்டு கனமழை காரணமாக சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பாலத்தை கடக்க கடுமையாக திண்டாடினர். இதனை தவிர்க்க இப்பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.