வேலூர், தி.மலை மாவட்டங்களில் - உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி : ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன், முருகேஷ் பங்கேற்பு

திருவண்ணாமலையில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் சிறப்பாக களப்பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் சிறப்பாக களப்பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.
Updated on
1 min read

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன், முருகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் அனைவரும் எய்ட்ஸ் தினஉறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். மேலும், எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுடன் அமர்ந்து ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உணவு சாப்பிட்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 112 இடங்களில் எச்ஐவி குறித்து ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் உள்ளன. 1,453 கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி தொற்று கண்டறியப் பட்டுள்ளது.

அவர்களுக்கு புதிய கூட்டு மருந்துகள் அளிக்கப்பட்டு தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் குறித்த தகவல்களை அறிய 18004 1918 00 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

திருவண்ணாமலை

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசும்போது, ‘‘இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினம் ‘உலகளாவிய ஒற்றுமை, பொறுப்பை பகிர்ந்து கொள்ளுதல்’ என்ற தலைப்பில் கடைபிடிக்கப்படு கிறது. எச்.ஐ.வி., எய்ட்ஸ் இல்லாத மாவட்டத்தை உருவாக்க எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டதும் கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப் படுகிறது. தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நடமாடும் நம்பிக்கை மையங்கள் என 116 மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை, பால்வினை நோய் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபரைசமுதாயத்தில் இருந்து புறக்கணிக்காமல் அவர்களை அரவணைப்பதின் மூலம் சமுதாயத்தில் அவர்களை நம்மில் ஒருவராக பாவித்து அன்பு செலுத்த வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பாக களப்பணி ஆற்றிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த வங்கி, தொண்டு நிறுவனங்கள், சேவை மையங்கள், ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்டோருக்கு ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

இதில், தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஷகில் அகமது, குடிமைப்பணி மருத்துவர் அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in