

தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆதிமூலம்(59), சரவணன் (45), முருகன் (31), பாலமுருகன் (52). இவர்கள் நான்கு பேரும் காரில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்துக்கு வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 1 மணியளவில் வேலவன்புதுக்குளம் தரை பாலத்தை கடந்து வரும்போது, பாலத்தில் சென்ற காட்டாற்று வெள்ளத்தில் கார் சிக்கிக்கொண்டது. காரின் உள்ளே இருந்தவர்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப் பட்டனர். சிறிது தொலைவு சென்ற நிலையில் பெரிய கல்லில் கார் மோதி நின்றது.
அதிலிருந்த 4 பேரும் பாலத்தை கடக்க முடியாமல் கூச்சல் போடவே, அக்கம்பக் கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்க முயன்றனர். சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பாலத்தில் இறங்கி கயிறு மூலம் நான்கு பேரையும், காரையும் பத்திரமாக மீட்டனர்.