ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் - தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி வழக்கு : உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல்  -  தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி வழக்கு :   உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
Updated on
1 min read

ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் 3 வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி கடந்த 2018 செப்.9 அன்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்.11 அன்று தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர்எந்த முடிவும் எடுக்காத நிலையில், விடுதலை செய்யக்கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்ட விரோதமாக சிறையில் அடைத்துவைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமென வும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளார். அதில், இது தொடர்பாக குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், அதன்படி மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. எனவே, நளினி தொடர்ந்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பி்ல், தமிழக ஆளுநரின் செயல்பாடு உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என்றும், தன்னை விடுதலை செய்ய ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை, எனவும் வாதிடப்பட்டது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், இதுதொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு வரும் டிச.7 அன்று விசாரணைக்கு வரவுள்ளது என்றார்.

அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இதுதொடர்பாக கூடுதல் பதில்மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தர விட்டு, விசாரணையை 3 வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதேபோல தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கும் தமிழக அரசு 3 வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in