Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

உடுமலை அருகே ஜம்புக்கல் கரடு பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி - பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை :

ஜம்புக்கல் மலையில் ஆக்கிரமிப்பை அகற்றி, மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

உடுமலை அமராவதி நகர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சி ஜம்புக்கல் கரடு மலையில் தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். திமுக ஆட்சிக்காலத்தின்போது இப்பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்காக சுமார் 500 ஏக்கர் பரப்பிலான நிலம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்டது.

பருவநிலை மாற்றத்தால் விவசாயம் செய்ய முடியாமல், விவசாய கூலித்தொழிலாளர்களாக பலர் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர், மலைக்கு செல்லும் பொதுப்பாதையில் கம்பிவேலி, கேட் அமைத்துள்ளனர். மற்றவர்கள் தங்களது விளைநிலங்களுக்கு செல்ல முடியாதபடி தடுப்புகளை ஏற்படுத்தி, பொதுஉரிமையை பறித்துள்ளனர். எங்கள் பகுதியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக உடுமலை கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே முறையாக நில அளவை செய்து உரிமை கோரப்படாத விவசாயம் செய்ய ஏதுவான நிலப்பகுதிகளை மலைவாழ் மக்களுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் பட்டா வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.

உடுமலை வன உரிமை கரட்டுபதி செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள்அளித்த மனுவில், ‘உடுமலை வட்டம் கல்லாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பதி செட்டில்மென்ட்டில் எரவாளன் பழங்குடியினத்தை சேர்ந்த 75 குடும்பங்கள் வசிக்கின்றன. எங்களுக்கு 2006-ம் ஆண்டு வன உரிமைசட்டப்படி வீட்டுமனை வழங்குவதாக தெரிவித்தனர். அதன்படி எங்களது அனுபவத்தில் உள்ள முழு இடத்துக்கு பட்டா வழங்காமல் அரை சென்ட் இடத்துக்கு மட்டும் அனுபவ உரிமைவழங்கி உள்ளனர். எங்கள் செட்டில்மென்டில் தற்போது 43 குடும்பங்களுக்குபசுமை வீடுகள் கட்ட செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது.

எங்களில் 10 பேர், பசுமை வீடுகள்கட்ட 600 சதுர அடி தேவைப்படுகிறது.எங்களுக்கு 215 சதுரஅடிக்குதான் பட்டா வழங்கியுள்ளனர். போதிய இடம்இல்லாததால், வீடு கட்ட முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, பசுமை வீடு கட்டுவதற்கு, எங்களது வீட்டு பகுதியில் குறைந்தபட்சம் 5 சென்ட் இடம் ஒதுக்கித்தர வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x