Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

ரயில்கள் மோதி வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க சிறப்பு குழு : உதகையில் வனத்துறை அமைச்சர் தகவல்

ரயில்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்படும் என உதகையில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்தில் கடந்த 26-ம் தேதி மங்களூரு-சென்னை விரைவு ரயில் வாளையாறில் இருந்து கோவை நோக்கிசென்று கொண்டிருந்தது.

அப்போது மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சோளக்கரை, போளுவாம்பட்டி பகுதியில் இந்தரயில் மோதியதில், மூன்று யானைகள் உயிரிழந்தன. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது என்பதற்காக தமிழக வனத்துறை சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உதகையில் அவர் கூறும்போது, ‘‘யானைகள் உயிரிழந்தது தொடர்பாக ரயில் இன்ஜின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதி வழியாக செல்லும்போது 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் செல்ல வேண்டும் என்பதுசட்டம். சம்பவம் நடைபெற்ற அன்று ரயில் சென்ற வேகத்தை கண்டறிய வேகம் அறியும் சிப்பை பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து பறிமுதல் செய்து, வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் யானைகள் உட்பட வனவிலங்கு கள், ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினர், வன விலங்குகள் நல வல்லுநர்களை கொண்டு ஒரு குழு அமைக்கப் பட்டு, முழுமையாக கண்காணிக்கப்படும்.

இதுதொடர்பாக வரும் 1-ம் தேதி சென்னையில் வனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. வனப்பகுதிக்குள் கட்டாயம் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் செல்ல வேண்டும் என்பதை உறுதி செய்ய வலியுறுத்தி ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x