

காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 4-ம் ஆண்டு இளநிலை வேளாண் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 112 பேர், ஊரக மற்றும் வேளாண் பணி அனுபவ பயிற்சி பாடத் திட்டத்தின் கீழ் அக்.26-ம் தேதி முதல் புதுச்சேரி, தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களில் களப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி முதல்வர் ஷாமராவ் ஜாகிர்தர் ஆலோசனையுடன், பயிற்சி பாடத் திட்டத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆனந்த்குமார் வழிகாட்டலில் இப்பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் ஒரு பிரிவினர் மயிலாடுதுறை மாவட்டம் காழியப்பநல்லூர், திருமெய்ஞானம், அனந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் களப் பயிற்சி மேற்கொண்டு, முன்னோடி விவசாயிகளான பாலகிருஷ்ணன், செல்வம், மெய்ஞானம், சுப்பையன், அனந்தமங்கலம் முருகானந்தம் ஆகியோருடன் நேற்று முன்தினம் கலந்துரையாடினர். அப்போது, புடலங்காய், பீர்க்கங்காய், மாம்பழம், எலுமிச்சை மற்றும் நிலக்கடலை, கீரை வகைகள், கிழங்கு வகைகளை பயிரிட்டு சந்தைப்படுத்துவது, அல்போன்சா, அமரப்பள்ளி, பங்கனப்பள்ளி, செந்தூரா, மல்கோவா உள்ளிட்ட 10 வகையான மா ரகங்கள் சாகுபடி, கால்நடை, கோழிகள் வளர்ப்பு உள்ளிட்டவை குறித்து விவசாயிகள் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இணைப் பேராசிரியர் காண்டீபன் மற்றும் கல்லுாரி ஊழியர்கள் செய்திருந்தனர். மாணவர் ஜஸ்வந்த்கெவின் வரவேற்றார். மாணவி மோனிகா ரமேஷ் நன்றி கூறினார்.