சங்கமித்ரா விரைவு ரயில் இன்ஜின் நடுவழியில் கோளாறு :

சங்கமித்ரா விரைவு ரயில் இன்ஜின் நடுவழியில் கோளாறு :
Updated on
1 min read

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற சங்கமித்ரா விரைவு ரயில் குடியாத்தம் ரயில் நிலையத்தை கடந்த நிலையில் மேல்ஆலத்தூர் அருகே நேற்று பிற்பகல் 2 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, இன்ஜினில் ஏற்பட்ட கோளாறால் திடீரென நடுவழியில் நின்றது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்ஜின் பெட்டியின் சக்கரங்கள் சுழலவில்லை.

இந்த தகவலறிந்த ஜோலார்பேட்டையில் ரயில் விபத்து மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று சரி செய்ய முயன்றனர். மேலும், பெங்களூரு மார்க்கமாக செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

நீண்ட நேர முயற்சிக்கு பிறகும் ரயில் இன்ஜின் கோளாறை சரி செய்ய முடியாதாததால் பழுதடைந்த இன்ஜினில் இருந்து பயணிகள் இருந்த பெட்டியை பின்நோக்கி இழுத்து குடியாத்தம் ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மாற்று இன்ஜின் மூலம் பெங்களூரு நோக்கி ரயில் புறப்பட்டது.

ஆனால், பிரதான ரயில் பாதையில் இன்ஜின் கோளாறாகி நின்றதால் ரயில்களை சென்னை செல்லும் ரயில் தண்டவாளத்தின் வழியாக மாற்றி, மாற்றி இயக்கினர். இதன் காரணமாக நேற்று இரவு வரை வெஸ்ட்கோஸ்ட், இன்டர்சிட்டி, லால்பாக் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளா கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in