Published : 27 Nov 2021 03:09 AM
Last Updated : 27 Nov 2021 03:09 AM

வைகுண்டம் அணையைத் தாண்டி - தாமிரபரணியில் பாயும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் :

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தை மழை வெள்ளம்சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆழ்வார்திருநகரி பகுதியில் வீடுகளைமழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தாமிரபரணி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக சேர்வலாறு- பாபநாசம் நீர் திறப்பு 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் குளிப்பதற்கும், நீந்துவதற்கும், மீன்பிடிப்பதற்கும் அல்லது வேறு எந்த வேலைக்கும் செல்ல வேண்டாம். ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் கூட வேண்டாம். இது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணியாச்சி, கடம்பூர், ஓட்டப்பிடாரம் பகுதியில் இருந்து பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம் கோரம்பள்ளம் குளத்துக்கு வருகிறது. இதனால் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் மொத்தமுள்ள 24 கண் மதகுகளில் 20 மதகுகள் வழியாக 16,446 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பாற்று ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்திமரப்பட்டி- கோரம்பள்ளம் இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்திமரப்பட்டி, காலாங்கரை, வீரநாயக்கன்தட்டு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழைப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கோரம்பள்ளம் குளத்தில் இருந்து 2015-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் 20 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

குரும்பூர் அருகே உள்ள கடம்பா குளம் நிரம்பிய நிலையில் மறுகால் பாய்கிறது. மேலும் வயல்களில் உள்ள மழைநீர் மற்றும் ஆங்காங்கே வழிந்தோடும் மழைநீர் சேர்ந்து வாய்க்கால்களில் பெரும்வெள்ளமாக பெருக்கெடுத்துள்ளது.

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் அருகே உள்ள வரண்டியவேல் தரைப்பாலத்தின் மேல் சாலையில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் நேற்று பிற்பகல் 12 மணிமுதல் திருச்செந்தூரில் இருந்துதூத்துக்குடி செல்லும் வாகனங்களும், தூத்துக்குடியில் இருந்துதிருச்செந்தூர் செல்லும் வாகனங்களும் வைகுண்டம், பேரூர், பேட்மாநகரம், புதுக்கோட்டை, வாகைக்குளம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதற்காக ஆறுமுகநேரி உப்பள முக்கு சந்திப்பில் பேரிகார்டு அமைத்து போலீஸார் வாகனங்களை திருப்பி விடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x