Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது, பக்தர்கள் பாதிப்பு : திருச்சிக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்; இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மிக கன மழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. திருச்செந்தூர் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்ததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் விட்டு விட்டு லேசான மழை பெய்த நிலையில் காலை 9 மணிக்கு மேல் தீவிரமாக மழை பெய்யத் தொடங்கியது. திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம், வைகுண்டம் பகுதியில் காலை 9 மணி முதல் கனமழை பெய்தது. திருச்செந்தூரில் மிகக் கனமழை கொட்டித் தீர்த்தது. பகல் 12 மணி வரை சுமார் 3 மணி நேரத்தில் மட்டும் 17 செ.மீ. மழை பதிவானது.

இதனால் திருச்செந்தூர் நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. சன்னதி தெரு, மார்க்கெட் பகுதி, போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் குளம் போல தேங்கியது. அனைத்து சாலைகளிலும் தண்ணீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது.

செந்திலாண்டவர் கோயில் கிரிப்பிரகாரம், சண்முக விலாசம் பகுதிகள் மழைநீரில் மூழ்கின. இந்த பகுதிகளில் இருந்துமழைநீர் கோயிலுக்கு உள்ளேயும் வழிந்தோடியதால் பக்தர்கள் அவதியடைந்தனர். கோயில் கடற்கரை பகுதியில் மணல் பரப்புதெரியாமல் தண்ணீர் தேங்கி நின்றது.

காயல்பட்டினம் பகுதியிலும் கனமழை கொட்டித் தீர்த்ததால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குலசேகரன்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம், வைகுண்டம் பகுதிகளில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன.

தூத்துக்குடி மாநகர பகுதியில் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சுமார்3 மணி நேரம் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் பிறகும் இரவு வரை லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. தூத்துக்குடி மாநகரமே வெள்ளக்காடாக மாறியது.

தற்காலிக பேருந்து நிலையம், தருவைவிளையாட்டு மைதானம் ஆகியவை தண்ணீரில் மிதக்கின்றன. தூத்துக்குடி டூவிபுரம், தாளமுத்துநகர், சத்யாநகர், கால்டுவெல் காலனி, பூபாலராயர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். சாலைகளில் வெள்ளம்பெருக்கெடுத்ததால் 3 மணி நேரத்துக்கும்மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

விமான சேவை

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் அனைத்தும் மூழ்கியது. விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து பகல் 1.50 மணிக்குதூத்துக்குடி வந்த விமானம் தரையிறங்க முடியாததால் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அந்த விமானத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு உள்ளிட்ட பயணிகள் இருந்தனர்.

ஆனால், மாலை 3.45 மணிக்கு வர வேண்டிய விமானம் வழக்கம் போல் வந்து சென்றது. இந்த விமானத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை செல்வதாக இருந்தது. ஆனால், கனமழையால் அவர் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்றுவிட்டார். சட்டப்பேரவை தலைவர் பயணித்த விமானம்மாலை 5.05 மணியளவில் மீண்டும் தூத்துக்குடி வந்து பயணிகளை இறக்கி விட்டது.

மாணவர்கள் திண்டாட்டம்

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து பகல் 12 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அந்த நேரத்தில் மிக கனமழை கொட்டியதால் மாணவ, மாணவியரும், பெற்றோரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர்.

தூத்துக்குடியில் உள்ள பெரும்பாலானபள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிகளைசுற்றியுள்ள சாலைகளில் இடுப்பளவுக்குதண்ணீர் தேங்கி நின்றது. மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே விடுமுறை அறிவிக்காததால் மாணவ, மாணவியர் மற்றும்பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். கன மழை எச்சரிக்கையை தொடர்ந்துதூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினத்தில் 25 செ.மீ. மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): காயல்பட்டினம் 246, திருச்செந்தூர் 217, வைகுண்டம் 138, குலசேகரன்பட்டினம் 135, சாத்தான்குளம் 105, ஓட்டப்பிடாரம் 99, தூத்துக்குடி 95.8, மணியாச்சி 79, வைப்பாறு 75, வேடநத்தம் 66, கடம்பூர் 59,சூரன்குடி 48, கோவில்பட்டி 45, காடல்குடி39, கயத்தாறு 36, விளாத்திகுளம் 35, கழுகுமலை 22, எட்டயபுரம் 19.3 மி.மீ.மழை பதிவாகியுள்ளது. 10 மணி நேரத்தில் மாவட்டத்தில் மொத்தம் 1,599.10 மி.மீ. மழை பெய்திருந்த நிலையில் சராசரியாக 84.16 மி.மீ. மழை பெய்துள்ளது.

எட்டயபுரம் அருகே தரைப்பாலம் மூழ்கியது

குளத்தூரில் பெரியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்து சிரமமடைந்தனர். வைப்பாறு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. நாகலாபுரம் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கடைசி எல்லையான எட்டயபுரம் அருகே ஆர்.வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் சுமார் 4 அடி உயரத்துக்கு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கிராம மக்கள் மதியம் முதல் ஊருக்குள் செல்ல முடியாமலும், ஊரை விட்டு வெளியேற முடியாமலும் தவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x