

நீலகிரி, கூடலூர் வனக்கோட்டங்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் என மூன்று கோட்டங்களாக நீலகிரி வனத்துறை இயங்கி வந்தது.
கூடலூர், நீலகிரி வனக்கோட்டங்கள், கோவை மண்டல வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்ததால் அலுவல் ரீதியான உத்தரவுகள் பெறவும், ஆய்வுக்கூட்டங்களில் கலந்துகொள்ளவும் கோவைக்கு வன அலுவலர்கள் சென்று வர வேண்டிய நிலை இருந்தது. இதனால் கால விரயமும், வீண் செலவும் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கோவை மண்டலத்தில் இருந்து கூடலூர், உதகைவனக்கோட்டங்கள் பிரிக்கப்பட்டு, முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மலைவாழ் மக்கள்கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையின் மையப் பகுதியாக அமைந்துள்ளதால் வனவளம் நிறைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் வனமாக மாற்றப்பட்டால், மக்கள் வெளியேற்றப்படுவார்களா? மக்களின் விளை நிலங்கள் பறிபோகுமோ என்ற அச்சம் உள்ளது,’’ என்றனர்.
இதுதொடர்பாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘ நிர்வாக ரீதியான காரணங்களுக்காகவே நீலகிரி, கூடலூர் வனக் கோட்டங்கள் முதுமலை கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நீலகிரிமண்டலத்துக்கு தனியாக தலைமை வனப்பாதுகாவலர் பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாடுகள், பிற பகுதிகளில் அமல்படுத்தப்பட மாட்டாது. எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை,’’ என்றார்.