

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வாளையாறு மனோஜூக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை,கொள்ளை வழக்கில் வாளையாறு மனோஜ் கைது செய்யப்பட்டார். அவர், குன்னூர் கிளை சிறையில்இருந்தார். இவருக்கு ஜாமீன் கேட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீலகிரியில் உள்ள இரு நபர்கள் உத்தரவாதம் அளித்தால், ஜாமீன் வழங்கப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்கள் உத்தரவாதம் அளிக்க முன்வராததால், ரத்த சொந்தங்கள் இருவர் உத்தரவாதம் அளிக்கலாம் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. ஆனால், வாளையாறு மனோஜின் மனைவி மட்டுமே உத்தரவாதம் அளிக்க முன்வந்ததால், அவரால் ஜாமீனில் வெளியே வர முடியவில்லை. இந்நிலையில், ஜாமீன் நிபந்தனையில் தளர்வு வேண்டிஉதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனோஜ் தரப்பில் அவரது வழக்கறிஞர் முனிரத்னம் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ஜாமீன்தாரர்கள் தத்தம்ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரடியாக நிறுத்தப்பட்டனர்.ஆவணங்கள் ஆய்வுக்குப் பின் அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து வாளையாறு மனோஜ் உதகையைவிட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது. வாரம்தோறும் திங்கள்கிழமை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு |நேரடியாக வந்து கையெழுத்திடவேண்டும் என நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.
இதுதொடர்பான ஆவணங்கள் குன்னூர் கிளை சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் சிறையில் இருந்துமனோஜ் வெளியே வந்தார்.