Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

நாட்டுக்கோழி வளர்ப்பில் ரூ.1.55 கோடி மோசடி செய்த - இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை :

நாட்டுக்கோழி வளர்ப்பில் ரூ.1.55 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனைவிதித்து கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இயங்கி வந்த ‘ஹெல்தி பவுல்ட்ரி பார்ம்ஸ்’ என்ற நாட்டுக் கோழிப்பண்ணை நிறுவனத்தினர், ‘ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒரு ஷெட் அமைத்து, 500 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் அளித்து, அதற்குத் தேவையான தீவனங்கள், மருந்துகள் அளித்து, மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.8,500, ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.8,500 அளிக்கப்படும்’ என விளம்பரம் செய்தனர்.

இரண்டாவதாக, ‘விஐபி திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒரு ஷெட் அமைத்து, 300 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் அளித்து, அதற்கு தேவையான தீவனங்கள், மருந்துகள் கொடுத்து, மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ. 8,500 அளிப்போம். ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.12 ஆயிரம் அளிப்போம்’ என்று அறிவித்தனர். இதனை நம்பி, மொத்தம் 99 பேர் ரூ.1.55 கோடி முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்ததுபோல் உரிய தொகை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, கோபியை அடுத்த கூடக்கரையைச் சேர்ந்த பழனிசாமி, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் கடந்த 2012 -ம் ஆண்டு புகார் அளித்தார். அதனடிப்படையில் நிறுவனத்தின் இயக்குநர்களான கார்த்திகா, எஸ்.பிரபு மற்றும் நிறுவனத்தில் பணியாற்றிய 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி நேற்று தீர்ப்பளித்தார். அதில், நிறுவனத்தின் இயக்குநர்கள் கார்த்திகா, பிரபு ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1.65 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் க.முத்துவிஜயன் ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x