

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர், கடந்த 2014-ம் ஆண்டு தன் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விண்ணப்பித்தார்.
மின் இணைப்பு வழங்க ரூ.2,700 லஞ்சம் வழங்குமாறு இளநிலை மின் பொறியாளராக பணிபுரிந்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரம் கணேஷ் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் அளித்தார்.
பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆலோசனையின் படி, கடந்த 2014-ம் ஆண்டு மே 29-ம் தேதி, கணேஷிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.2,700-ஐ சுந்தரம் அளித்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணேஷை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.அமுதா வாதிட்டார்.முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், கணேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று சிறப்பு நீதித்துறை நடுவர் இரா.வேலரஸ் தீர்ப்பு அளித்தார். அத்தீர்ப்பில், லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கணேஷுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.