மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி - கப்பலூர் டோல்கேட்டில் இன்று முதல் வசூல் : திருமங்கலம் பகுதி மக்கள் போராட முடிவு
திருமங்கலம் பகுதி வாகனங் களுக்கு கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ள பிரச்சினை சுமூகமாக பேசி தீர்க்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி உறுதியளித்துள்ளார்.
திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட் விதிமீறல் என்பதால் திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், டோல்கேட்டை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கப்பலூர் டோல்கேட்டை அகற்ற சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரையில் திருமங்கலம் தொகுதி வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும் என ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் கடந்த மாதம் உத்தரவிட்டார். கடந்த ஒரு மாதமாக திருமங்கலம் பகுதி வாகனங் களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் (நவ.24) எந்த வாகனங்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்படாது என டோல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை கட்டண விலக்கு பெற்றுவரும் வாகனங்களுக்கு நோட்டீஸ் அளித்து வருகின்றனர். இதனால் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதியைச் சேர்ந்த வாகனங்களின் உரிமையாளர்கள் போராட்டம் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இது குறித்து திருமங்கலம் நகர் திமுக முன்னாள் செயலாளர் தர் கூறுகையில், ‘ நாளை முதல் (இன்று) திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான நீதிமன்ற உத்தரவு எங்களிடம் உள்ளது என டோல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சர், ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி வசூலித்தால் நாளை (நவ.25) கப்பலூர் டோல்கேட்டை வாகனங்களுடன் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதற்கு போலீஸார்அனுமதி மறுத்தால் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி,பேரையூர் உள்ளிட்ட பல இடங்களில் வாகனங்களுடன் மறியல் நடத்த வாகன உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் திட்டமிட்டுள்ளனர்’ என்றார்.
இதுகுறித்து அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், ‘இப்பிரச்சினை தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி களிடம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டுள்ளார். டோல்கேட் அலுவலர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். இதில் திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் வகையில் சுமூக தீர்வு எட்டப்படும்’ என்றார்.
