Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM

கடன் பிரச்சினையில் இருந்து தப்ப - கடத்தல் நாடகமாடிய தம்பதிக்கு ரூ.1 லட்சம் அபராதம் :

கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க கணவரை சிலர் கடத்தி விட்டதாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சவுக்கியாதேவி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

வழக்கறிஞரான எனது கணவர் ஜெயவேலன், தென்காசி வல்லத்தைச் சேர்ந்த ரகுமானிடம் கடன் வாங்கியிருந்தார். கடனை திரும்பச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் என் கணவரை அவர் கடத்தியுள்ளார். கணவரைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு கரோனா காலத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருந்தவாறு ரகுமானிடம் செல்போனில் பேசி குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? எனக் கேட்டனர். அதற்கு அவர் மனுதாரரின் கணவர் தன்னிடம் கடன் வாங்கியதாகவும், கடனை திரும்பத் தராமல் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து மனுதாரரின் கணவரை தேடிப்பிடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மனுதாரர் கணவர் தான் ஊருக்கு திரும்பி வந்துவிட்டதாகவும், மனுவை தொடர்ந்து விசாரிக்க வேண்டியதில்லை என மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ரகுமான் சார்பில் வழக்கறிஞர் டி.எஸ்.வெங்கட்ரமணா வாதிடுகையில், மனுதாரரின் கணவர் அரசியல்வாதிகள் பலரிடம் கடன் வாங்கித்தருவதாக முன்பணமாக ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். பணத்தைத் திரும்பக் கேட்டதால் மனுதாரரும், அவரது கணவரும் தலைமறைவாகிவிட்டனர்.

ஆனால், அவரை கடத்தியதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடுமையான கரோனா காலத்தில் போலீஸார் மனுதாரரின் கணவரை தேடி பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் மனுதாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும், என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனுதாரரின் கணவர்அவராகவே தலைமறைவாகியுள்ளார். அதை மறைத்து மனைவியை வைத்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளார்.

மனுதாரரும், அவரது கணவரும் தனிப்பட்ட பிரச்சினைக்காக மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளனர்.

இதனால் ரூ.1 லட்சம் அபராதத்துடன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்பணத்தை மனுதாரரும், அவரது கணவரும் தென்காசி எஸ்பியிடம் வழங்க வேண்டும். அவர் இப்பணத்தை கரோனா காலத்தில் மனுதாரரின் கணவரை தேடி அலைந்த தனிப்படை போலீஸாருக்கு மதிப்பூதியமாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x