

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடந்தது.
திருப்பூர் அவிநாசி சாலையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அளித்த மனு: திருப்பூரில் புஷ்பா திரையரங்க பேருந்து நிறுத்தம் எதிரே, தனியார் மருத்துவமனை, ஸ்கேன் மையம், வங்கி என பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த நகரின் பிரதான பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை, மதுபானக்கூட வசதியுடன் அமைவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புஷ்பா திரையரங்க பேருந்து நிறுத்த பகுதி ரயில் நிலையம், கல்லூரி சாலை, அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் நகரின் மையப்பகுதியாகும். மதுக்கடை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு அருகே தேவாங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. எனவே டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக கைவிட வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.
மின் கம்பங்கள் அமைத்து மின் இணைப்புதர வலியுறுத்தி பெருந்தொழுவு அங்காளம்மன் நகர் பொதுமக்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்பின் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, தர்ணாவை கைவிட்டனர். அதன்பின்பு அவர்கள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் 88 வீட்டுமனைகள் உள்ளன. இதில், இரண்டு வீடுகள் கட்டியுள்ளோம். எஞ்சியவர்களும் வீடுகள் கட்டுவதற்கு தயாராக உள்ளனர். ஆனால் எங்கள் பகுதியில் மின் இணைப்புக்கான மின்கம்பங்கள் அமைக்க மின்வாரியம் 16 கம்பங்களை நட்டது. தங்களின் சொந்த ஆதாயத்துக்காக இருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், நடப்பட்ட மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. எங்களுக்கு மின் கம்பங்கள் அமைத்து மின் இணைப்புதர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டு ஜெ.ஜெ.நகர் விரிவு பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் ‘எங்கள் பகுதியில் தெருவிளக்கு, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் என எவ்வித வசதிகளும் இல்லை. கடந்த வாரம் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி குளம்போல மாறியது. இதனால் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை பகுதியாக இருந்தாலும், எங்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை’ என குறிப்பிட்டுள்ளனர்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து சர்மிளாவுக்கு ரூ.20,000-க்கான காசோலையும், சுதாவுக்கு, ரூ.10,000-க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.