Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் - தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு :

பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தாம்பரம் நகராட்சியில் 2 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

கன மழையால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ளபாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டுஓடுகிறது. ஆற்றுப் படுகையிலிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம்மாவட்டங்களில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல்வேறு இடங்களில் குடிநீர் உந்து நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீரேற்று நிலையத்தில் மோட்டார் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஆற்றில் தண்ணீர் கலங்களாகவும் பழுப்பு நிறமாகவும் ஓடுவதால் அந்ததண்ணீரை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் புகார்

இதனால் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம், பல்லாவரம், திருநீர்மலை போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிட்லபாக்கம் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், "பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. நிலைமை சீரான உடன் குடிநீர் விநியோகிக்கப்படும்" என தாம்பரம் நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல்வெளியாகி உள்ளது. இந்த தகவலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) இரா.லெட்சுமணனிடம் கேட்டபோது, "சமூக வலைதளங்களில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் குடிநீர்விநியோகம் செய்யப்படவில்லை.ஓரிரு நாட்களில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x