பிளவக்கல், கோவிலாறு, சாஸ்தா கோயில்  -  அணைகளில் தண்ணீர் திறப்பு :

பிளவக்கல், கோவிலாறு, சாஸ்தா கோயில் - அணைகளில் தண்ணீர் திறப்பு :

Published on

விருதுநகர் மாவட்டம், வத்திரா யிருப்பு வட்டத்திலுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, ராஜபாளையம் வட்டம் சாஸ்தா கோயில் ஆகிய அணைகளிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அணைகளிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டு மலர் தூவினர்.

அப்போது அமைச்சர்கள் பேசுகையில் , பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து பிளவக்கல் திட்டத்தில் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் 5 நாட்களுக்கும், பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்துக்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் பிப்.28-ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும்.

பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து வரத்து கால்வாய்கள் மூலம் 40 கண்மாய்கள் மற்றும் நேரடி பாசனம் மூலமாக 8,500 ஏக்கர் பாசன வசதி பெறும்.

சாஸ்தா கோயில் அணையிலிருந்து 8 நாட்களுக்கு வினாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் வரத்து கால்வாய்கள் மூலம் 11 கண்மாய்களுக்கு சென்றடையும். இதன் மூலம் 3,130 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று பேசினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in