Published : 22 Nov 2021 03:09 AM
Last Updated : 22 Nov 2021 03:09 AM

வேலூர் சத்துவாச்சாரியில் - சுரங்கபாதை அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை :

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடக்கும் போது அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டன. இதை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் வைத்து கோரிக்கையை ஏற்று கெங்கையம்மன் கோயில் அருகாமையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இப்பணிக்களுக்காக 1 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வேலூர் சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் (சர்வீஸ் ரோடு) இருந்து சுரங்கப்பாதையில் பொதுமக்கள் இறங்கும் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில், அதாவது வட்டார போக்குவரத்து அலுவலகம் சாலை குறுக்கிடும் இடத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் கடந்த மாதம் தொடங்கி சில நாட்களுக்கு முன்பு நிறை வடைந்தது .

இதனைத்தொடர்ந்து, வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சத்துவாச்சாரிக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் கெங்கையம்மன் கோயில் அருகே தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இதையொட்டி அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதற்காக, வேலூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் கெங்கையம் மன் கோயில் அருகே கான்கிரீட் கற்கள் கொண்ட தடுப்புகள் வைக்கப்பட்டு அவ்வழியாக வாகனங்கள் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வேலூர் கிரீன் சர்க்கிளில் இருந்து சத்துவாச்சாரிக்கு சர்வீஸ் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் ஆட்சியர் அலுவலக மேம்பாலம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி விடப்படுகின்றன.

இந்த நடைமுறை இன்னும் சில நாட்கள் வரை இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை, ஆற்காடு, காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், கார்கள், கனரக வாகனங்கள் என அனைத்தும் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் மற்றும் கன்னியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்திற்கு வராமல், மேம்பாலம் வழியாக நேராக செல்கின்றன.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சர்வீஸ் சாலை வழியாக வரும் பேருந்துகள் நருவி மருத்துவமனை அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து மேம்பாலம் வழியாக செல்கின்றன.

இதனால், சத்துவாச்சாரி, தென்றல் நகர், ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் புதிய பேருந்து நிலையம் அல்லது வள்ளலார் பகுதிக்கு சென்று, பிறகு அங்கிருந்து தான் பேருந்து ஏறிச்செல்ல வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருப்பதாக குற்றஞ்சாட்டி யுள்ளனர். இருந்தாலும், சுரங்கப்பாதை அவசியம் என்பதால் விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x