

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தை அடுத்த புன்னப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி நிரோஷா (38). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில், தர்ஷினி, வினிதா ஆகிய இரு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி மாலை நிரோஷா தனது இளைய மகள் வினிதாவுடன் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, மறுநாள் காலை தாமரைப்பாக்கம் அணைக்கட்டு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரை பகுதியில் நிரோஷாவின் இருசக்கர வாகனம், நிரோஷா மற்றும் வினிதாவின் காலணிகள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, வெங்கல் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தாயும், மகளும்கொசஸ்தலை ஆற்றில் இறங்கியபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினர் இரு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். எனினும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அவர்கள் தேடுதல் வேட்டையை நிறுத்திக் கொண்டனர். எனினும், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் உள்ள உறவினர் வீட்டில் நிரோஷாவும், மகள் வினிதாவும் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர், அவர்களை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் கடன்சுமை ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உறவினர் வீட்டுக்கு தப்பி ஓடி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸார் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். எனினும், நிரோஷா கடன் தொல்லை காரணமாக வீட்டை விட்டு சென்றாரா அல்லதுவேறு ஏதேனும் காரணம் உள்ளதாஎன்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.