Published : 21 Nov 2021 03:08 AM
Last Updated : 21 Nov 2021 03:08 AM

சுற்றுலாப் பயணிகள் இதுவரை பார்க்காத - பாரம்பரிய இடங்களை காண ‘மரபு நடை’ திட்டம் : தஞ்சாவூர் மாநகரில் செயல்படுத்த ஏற்பாடு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகர் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் இதுவரை பார்க்காத, பழமையான பாரம்பரியமிக்க இடங்களை நடந்தே சென்று காணும் வகையில், ‘மரபு நடை’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகரில் பெரிய கோயில், அரண்மனை வளாகம், சரஸ்வதி மகால் போன்ற இடங்களுக்கு மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்துசெல்கின்றனர்.

அதையும் தாண்டி, தஞ்சாவூர் மாநகரில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பார்க்க, அறிந்துகொள்ள இன்னும் பழமையான, பாரம்பரியமிக்க இடங்கள் அதிகளவில் உள்ளன.

அவற்றை வெளிக்கொண்டு வரும் விதமாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் ‘மரபுநடை' என்ற திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின்படி, மாநகரில் உள்ள தஞ்சாவூர் சிறிய கோட்டை, நால்வர் இல்லம், தேர் நிறுத்தம், அய்யன் குளம் உள்ளிட்ட 20 இடங்களை மேம்படுத்தி, அங்கு அதன் வரலாறு குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் பலகை அமைத்து, சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்றே பார்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று 3 கி.மீ தொலைவுக்கு நடந்துசென்று பெரிய கோயில், நால்வர் இல்லம், அய்யன் குளம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “தஞ்சாவூர் மாநகரில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட யாரும் அறிந்திடாத, பாரம்பரிய மிக்க இடங்களை பார்வையிட ‘மரபு நடை’ என்ற திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான வழிகாட்டி தயாரிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் இடங்களில் கிடைக்கச் செய்து, அதன் மூலம் மற்ற பாரம்பரிய இடங்களையும் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர்(வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன், இந்திய தொல்லியல் துறை இளநிலை பராமரிப்பு அலுவலர் சீதாராமன், தமிழக தொல்லியல் துறை இளமின் பொறியாளர் தினேஷ், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், இன்டாக் செயலர் முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x