காஞ்சிபுரம் மாவட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு - பிரதான சாலைகளில் இரு தரைப்பாலங்கள் துண்டிப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட  ஆறுகளில் வெள்ளப் பெருக்கு  -  பிரதான சாலைகளில் இரு தரைப்பாலங்கள் துண்டிப்பு :  மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வாலாஜபாத், வெங்கச்சேரி பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் திறக்கப்பட்டு அதிக அளவு தண்ணீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது. காஞ்சிபுரத்தில் பாலாற்றில் நேற்று காலை விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேறியது. நண்பகல் இது 85 ஆயிரம் கன அடியாக இருந்தது. பாலாறும், செய்யாறும் இணையும் திருமுக்கூடல் பகுதியில் விநாடிக்கு 1,25,000 கன அடி நீர் நண்பகலில் பாலாற்றில் சென்றது. இதனால் பாலாற்றின் இரு கரையையும் தொட்டவாறு வெள்ளநீர் சென்றது.

இதன் கராணமாக பாலாற்றில்வாலாஜாபாத் பகுதியில் உள்ள தரைப்பாலம், செய்யாற்றில் வெங்கச்சேரி பகுதியில் உள்ள தரைப்பாலம் ஆகியவை நீரில் மூழ்கின. வாலாஜாபாத் தரைப்பாலத்தின் மீது ஏற்கெனவே போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. தற்போது வெங்கச்சேரி தரைப்பாலத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் வருபவர்கள் பெருநகர் சென்று காஞ்சிபுரம் - திண்டிவனம் சாலை வழியாக காஞ்சிபுரம் வந்தனர். திருமுக்கூடல் வழியாக உத்திரமேரூர் வந்தனர்.

போக்குவரத்து துண்டிக்கப்பட்ட வாலாஜாபாத் தரைப்பாலம் மற்றும் வெங்கச்சேரி தரைப்பாலம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தேவி உட்பட பலர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in