அரசு வேலை வாங்கி தருவதாக - ரூ.50 லட்சம் மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்தவர் கைது :

ஏழுமலை பெஞ்சமின்
ஏழுமலை பெஞ்சமின்
Updated on
1 min read

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 22 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, ரூ.50 லட்சம் பெற்று போலி நியமன ஆணைகளை வழங்கிய சென்னையை சேர்ந்த வரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் வெளிப்பட்டணம் காளிகாதேவியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சேது பாஸ்கரன் மகன் விக்னேஷ்ராஜா (32). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரிடம் சென்னையைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் ஏழுமலை பெஞ்சமின் (51), தான் சென்னை கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், பணம் அளித்தால் அரசு வேலை வாங்கி தருவதாக வும் கூறியுள்ளார். இதை நம்பிய விக்னேஷ் ராஜா, தனது சகோதரி உட்பட 22 பேரிடம் மொத்தம் ரூ.50 லட்சம் வசூலித்து ஏழுமலை பெஞ்சமினிடம் அளித்துள்ளார். இந்நிலையில், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திலும், பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பல்வேறு பணியிடங்கள் தொடர்பாக 22 பேரிடம் நியமன ஆணைகளை ஏழுமலை பெஞ்சமின் வழங்கினார். அவை போலி என தெரிய வந்தததை அடுத்து பாதிக்கப் பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், ஏழுமலை பெஞ்சமினை நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரா.திருமலை கூறியதாவது: ஏழுமலை பெஞ்சமின் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் அதிலிருந்து விலகி ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளார். ராமநாதபுரம் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பெயரில் போலி கையெழுத்திட்டு பணி ஆணைகளை வழங்கியுள்ளார். இதேபோல் வேறு மாவட்டங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in