

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கண்மாய் உபரி நீரைத் திறந்துவிடக் கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் பொதுப்பணித்துறை பெரிய கண்மாய் உள்ளது. இக்கண்மாய் நிரம்பியதும், உபரி நீர் அருகேயுள்ள பலவாக்குடை, பால்குளம், நரங்கணி உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்லும்.
கண்மாய் நிரம்பிய நிலை யில் சில நாட்களுக்கு முன்பு கலுங்கு வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டது.
பால்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லாத நிலையில், திடீரென மறவமங்கலம் கண்மாய்கலுங்கு அடைக்கப்பட்டது. இதையடுத்து தண்ணீர் திறக்கக்கோரி பால்குளம் கிராம மக்கள் மறவமங்கலத்தில் காரைக் குடி - பரமக்குடி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் சமரசத்தை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட பால்குளம் கிராம மக்கள் 16 பேர் மீது காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.