

முத்தரப்பு குழு அமைத்து நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், என ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, அசோகபுரம், மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
கடந்த சில மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விசைத்தறியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நடத்துவோர் இரண்டாவது நாளாக நேற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமையில், விசைத்தறியாளர்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள 6 லட்சம் விசைத்தறிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பிலான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதம் முதல், தற்போது வரை நூல் விலை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
பஞ்சு விலை குறைவாகவே இருந்தபோதிலும், பஞ்சு, நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து, செயற்கையான தட்டுப்பாட்டை உண்டாக்கி அவ்வப்போது நூல் விலையை உயர்த்தி வருகின்றனர்.
சிமென்ட் விலை உயரும்போது அரசு தலையிட்டு அதனை குறைக்க வழிவகை செய்ததுபோல், ஜவுளித்துறையையே முடக்கும் வகையில் நூல் விலை உயர்ந்துள்ள சூழலில், அதனைக் கட்டுப்படுத்த அரசு தலையிட வேண்டும். நூல் உற்பத்தியாளர்கள், நூல் உபயோகிப்போர் சங்கங்கள் மற்றும் அரசுத் தரப்பு அதிகாரிகள் என முத்தரப்பு குழு அமைத்து, அதன் மூலம் நூல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.