Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM

தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அதிமுகஅமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக வழக்கு : காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு

தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தருமபுரி மாவட்டம் மோளையனூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியும், மோளையனூர் ஊராட்சி முன்னாள் தலைவருமான கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு நான் ஊராட்சி தலைவராக இருந்த போது பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளேன். டெண்டர் ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினையில் அப்போது அதிமுக உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பி.பழனியப்பனின் நெருங்கிய உறவினரான வேலாயுதம் என்பவருக்கும், எனக்கும் ஏற்பட்ட பிரச்சினையால், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி என்னை பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். இந்நிலையில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரான பி.பழனியப்பனுக்கும், 2016-ல் அதிமுக அரசின் உயர் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த கே.பி.அன்பழகனுக்கும் ஏற்கெனவே அரசியல் ரீதியாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு என்னைத் தொடர்பு கொண்ட கே.பி.அன்பழகன், எனது ஊராட்சி தலைவர் பறிபோக காரணமாக இருந்த பி.பழனியப்பன் மீது குற்றம் சாட்டி அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கார் முன்பாக தீக்குளிக்கச் சொன்னார்.

அதன்படி கடந்த 2015 செப்.29 அன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் வெளியே வந்த ஜெயலலிதாவி்ன் கார் முன்பாக தீக்குளித்தேன். அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் என்னைக் காப்பாற்றினர். அதன்பிறகு என் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என ஜெயலலிதா கூறியதால் போலீஸாரும் என்னை விடுவித்தனர். 2015-ம் ஆண்டுநடந்த இந்த தீக்குளிப்பு சம்பவத்தின் எதிரொலியாக 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கே.பி.அன்பழகனுக்கு அதே உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. அதன்பிறகுதான் கே.பி.அன்பழகன் தனது அரசியல் ஆதாயத்துக்காக என்னை தீக்குளிக்க சொன்னார் என்பது தெரியவந்தது. அவருடைய காரில் இருந்துதான் எனக்கு பெட்ரோல் கேனை எடுத்துக் கொடுத்தனர். எனவே என்னை தற்கொலைக்குத் தூண்டிய முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குஎதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமியும், அரசு தரப்பில் வழக்கறிஞர் தாமோதரனும் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சென்னை மாநகரகாவல் ஆணையர் வரும் நவ.22-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x