திருவள்ளூரில் ரயில்வே நிர்வாகம் சார்பில் தடுப்புச் சுவர் - போக்குவரத்து பாதிக்கப்படும்எனக்கூறி மக்கள் சாலை மறியல் :

திருவள்ளூரில் ரயில்வே நிர்வாகம் சார்பில்  தடுப்புச் சுவர் -  போக்குவரத்து பாதிக்கப்படும்எனக்கூறி மக்கள் சாலை மறியல் :
Updated on
1 min read

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில், வரதராஜன் நகர், கோமதி நகர், காவாங்கரை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

இப்பகுதி மக்கள் அனைவரும் மணவாளநகர், திருவள்ளூர் நகர் பகுதிகளுக்கு செல்ல கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள மணவாளநகர்- வரதராஜன் நகர் தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால், இவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையம்- மணவாளநகர் தரைப்பாலம் வழியாக வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் வரதராஜன் நகர்அருகே ரயில் பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் யாரும் நுழையாதவாறு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதனால், தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்படும் எனக் கூறி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கொட்டும் மழையில் மணவாளநகர் ரயில் மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடம்வந்து, பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

அப்போது அவர்கள், "மக்கள் சென்று வர தடை ஏற்படாத வகையில் விரைவில் மாற்று ஏற்பாடுசெய்யப்படும்" என உறுதியளித்தனர். இதையடுத்து, அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in