

சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி நகரில் ராமநாதன் (44) என்பவருக்குச் சொந்தமான அட்டைக் குழாய் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு பேன்ஸி ரகப் பட்டாசுகளுக்கான அட்டைக் குழாய்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. அதோடு, சட்டவிரோதமாக பேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரித்தபோது, கடந்த 15-ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், அங்கு பணியாற்றிய வேல்முருகன் (37), மனோஜ்குமார் (23) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மேலும், கார்த்தீஸ்வரி (33), ஹமீதா (55) ஆகியோர் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, ஆலையின் உரிமையாளர் ராமநாதன், அவரது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் அவர்களுக்கு வெடிமருந்துகளை வழங்கிய பட்டாசு ஆலை உரிமையாளர் மாரிமுத்து, அவரது பங்குதாரர் மணிராஜ் ஆகியோர் மீது சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.