

அடுத்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் தலை மையில் நாளை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் கூறும்போது,‘‘ திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 2022-ம் ஆண்டுக் கான ஜல்லிக்கட்டு விழா எவ்வித சிக்கலுமின்றி நடைபெற ஏதுவாகவும், கடைசி நிமிட அவரசத்தை தவிர்க்கவும் மற்றும் அரசிதழில் அறிவிப்பு குறித்த நேரத்துக்குள் வெளியிடும் பொருட்டு திருப்பத்தூர் வட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழா குழுவினர் அல்லது மனுதாரர்களின் மனுக்களை இம்மாதம் 30-ம் தேதிக்குள் வழங்கிட வேண்டும்.
திருப்பத்தூர் வட்டத்தில் 2022-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தும் கிராமங்களின் விழாக்குழுவினர்கள் அனைவருக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எனது தலைமையில் ஜல்லிக்கட்டு விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
ஆகவே, திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் அவரவர் கிராமங்களில் உள்ள ஜல்லிக்கட்டு நடத்தும் விழா குழுவினர்களுக்கு தகவல் தெரிவித்து கூட்டத்துக்கு வரும்படியும், கூட்டத்துக்கு வரும் போது விழா குழுவினர்கள் 2021-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதற்கான அரசிதழ் வெளியீடு, விழா குழுவினர் மனு, விழா குழுவினர்களின் ஆதார் அட்டை நகல்கள் உடன் கொண்டு வர வேண்டும்.
மேலும் இக்கூட்டத்தில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்’’ என்றார்.