Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

உடுமலை வட்ட மலைவாழ் மக்களுக்காக - தனி ஊராட்சி மன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக தலைமை செயலாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்

உடுமலை வட்ட மலைவாழ் மக்களுக்காக, 2 தனி ஊராட்சி மன்றங்கள் அமைத்துத் தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி மலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, குறிப்பட்டி, பூச்சுக்கெட்டாம்பாறை, கருமுட்டி, மேல் குறுமலை, குறுமலை, ஈசல்திட்டு, ஆட்டுமலை,பொறுப்பாறு, கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி, மூங்கில் பள்ளம், காட்டுபதி, புளியம்பட்டி ஆகிய செட்டில்மென்ட் பகுதிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட புலையர்கள், முதுவன், மலை மலசர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான வாக்குரிமையை மலைவாழ் மக்களுக்கு வழங்க வேண்டிய தார்மீக கடமை தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் உள்ளது.

திருப்பூர் மாவட்டம் முழுமைக்கும் சேர்த்து உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஓர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரேயொரு வார்டு மட்டுமே, பழங்குடி பெண் இட ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. 15-க்கும் மேற்பட்ட வனக்குடியிருப்பில் வாழும் மலைவாழ் மக்கள், சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் வாக்களித்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் இவர்களுக்கான வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது, விநோதமாக உள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் காப்புக்காடுகளின் தொடர்ச்சி வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதி வரை நீள்கிறது. அங்குள்ள மலைவாழ் கிராம மக்களுக்கு உள்ளாட்சி அமைப்பு உண்டு. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி, 1996-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது கிராமங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது மேற்காணும் செட்டில்மென்ட் கிராமங்களை பிரிக்காமல் விட்டுவிட்டதே, இப்பிரச்சினைக்கு அடிப்படை காரணமாகும்.

திருமூர்த்தி அணைக்கு கிழக்கே உள்ள ஈசல்தட்டு தளிஞ்சி, தளிஞ்சிவயல், கோடந்தூர், கரட்டுபதி, ஆட்டுமலை பொருப்பாறு என ஓர் ஊராட்சி மன்றமாகவும், திருமூர்த்தி அணைக்கு மேற்கே உள்ள திருமூர்த்திமலை குறுமலை, மேல்குறுமலை, குழிப்பட்டி, காட்டுப்பட்டி, மாவடப்பு, பூச்சக்கொட்டம்பாறை என ஓர் ஊராட்சி மன்றமாகவும் தனித்தனியாக இரண்டு ஊராட்சி மன்றங்களாக அமைத்து, மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை சுயமாகபூர்த்தி செய்து கொள்ளும் வகையில், உள்ளாட்சி அரசாங்கத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x