ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் : மீனவர்கள், கிராம மக்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என மீனவர்கள், சங்குகுளி தொழிலாளர்கள், மீனவர் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கனவாய் மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் நம்புராஜ், தூத்துக்குடி லயன்ஸ் டவுன் மினி சகாயபுரத்தைச் சேர்ந்த சகாயமாதா பைபர் வள்ளம் மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் பிரடி, மேட்டுப்பட்டி சங்குகுளி தொழிலாளர் சங்கத் தலைவர் பரமசிவன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
மீன்பிடி தொழில் செய்துவருகிறோம். எங்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, வேலையில்லாதவர்களுக்கு வேலை என, பல்வேறு உதவிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்துவருகிறது. எங்களது குழந்தைகளின் வாழ்க்கை தரம் உயர ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அய்யனடைப்பு ஊராட்சி சோரீஸ்புரம், மடத்தூர், தெற்குவீரபாண்டியபுரம், வடக்கு சிலுக்கன்பட்டி கிராம மக்கள் வழங்கிய மனுவில், “ எங்கள் பகுதியைச் சேர்ந்த பலர் ஸ்டெர்லைட் ஆலைமூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிவாய்ப்பு பெற்றுவந்தோம். தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் வேலையின்றி வறுமையில் வாடுகிறோம். ஸ்டெர்லைட் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. மகளிர் குழுக்களைசேர்ந்த பெண்கள் வேலைவாய்ப்புபெற்றனர். திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
