

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து 265 மனுக்கள் பெறப்பட்டன.
கரூர் செங்குந்தபுரத்தைச் சேர்ந்த செல்வி என்பவர், 30 வயதான மாற்றுத்திறனுடைய மகனுடன் ஆதரவற்ற நிலையில் வசித்து வருவதால், தங்களுக்கு வசிக்க வீடு வழங்கக் கோரி மனு அளித்தார். அவருக்கு, காந்தி கிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்பு வழங்க உத்தரவிட்டதுடன், பயனாளியின் பங்குத்தொகையான ரூ.1.80 லட்சத்தை ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து வழங்குவதாக தெரிவித்தார்.
கரூர் வெங்கமேடு சின்னகுளத்துப்பாளையத்தைச் சேர்ந்த பரிதா பேகம் என்பவர், தனது 6 வயது மகனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவும்படி அளித்த மனுவுக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவர்(ஆர்எம்ஓ) என்.எஸ்.குமார் முறையாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, உள்ளுறை மருத்துவரை எச்சரித்த ஆட்சியர், அச்சிறுவனை பரிசோதித்து, உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.