

தொடர் கனமழையால் நெய்வேலி அருகே வடக்குமேலூர் கிராமத்தில் வீடு இடிந்ததில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு பாமக நிர்வாகி ஜெகன் ஆறுதல் கூறினார்.
நெய்வேலி அருகே உள்ள வடக்குமேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (47).லாரி ஓட்டுநர். கடந்த 12-ம்தேதி நள்ளிரவு தொடர் மழையின் காரணமாக இவரது குடிசை வீடு இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி சந்தோஷ்குமார், அவரது தந்தை பச்சமுத்து, தாயார் கல்யாணி, மனைவி வளர்மதி, மகள் ஈஸ்வரி, மகன் சதீஷ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்தோஷ்குமார் உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வடக்குத்து ஊராட்சி முன்னாள் தலைவரும், பாமக முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளருமான கோ.ஜெகன் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செல்போன் மூலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரண இழப்பீடு மற்றும் வீடும் கட்டித்தர வலியுறுத்தினார்.