

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை யால் இதுவரை 19 வீடுகள் முழுமையாக சேதமடைந்து, ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 8 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறுகையில், ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்காத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் இதுவரை 24 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 3 ஏரிகளில் 75% நீரும், 3 ஏரிகளில் 50 % நீரும், 2 ஏரிகளில் 25 % நீரும், 18 ஏரிகளில் 25 % குறைவாக நீரும் உள்ளன. ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து 112.20 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 190.72 கன அடிதண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து வெளி யேற்றப்பட்டு வரும் தண்ணீர் செல்லும் கிராமங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்துார் அடுத்த ஆதியூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் 156 பேர், ஜோலார்பேட்டை கட்டேரி அம்மன் சமுதாயக் கூடத்தில் 93 பேர், குரும்பேரி அரசு தொடக்கப்பள்ளியில் 53 பேர் என 217 நபர்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
வீடு இழந்தவர்களுக்கு சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான இழப்பீடு தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. அதேபோல, சாலையோரம் இருந்த பழமையான சில மரங்கள் கனமழையால் முறிந்து விழுந்துள்ளன. அது குறித்த கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.
கனமழை காரணமாக, ஆம்பூர் வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை கனமழைக்கு 8 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 104 வீடுகள் பகுதியாகவும்,19 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சாலைகளை சீரமைக்கவும், மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, புதுப்பேட்டை ரயில்வே மேம்பாலம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம், ஜோலார்பேட்டை ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை விரைவாக அகற்றவும், எதிர்காலத்தில் அங்கு தண்ணீர் தேங்காத வகையில் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்க சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’என்றார்.