Published : 13 Nov 2021 03:09 AM
Last Updated : 13 Nov 2021 03:09 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் 50-க்கும் மேற்பட்டவீடுகள் இடிந்து விழுந்தன. வாணியம்பாடியில் உழவர் சந்தையின்சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 2 வியாபாரிகள் படுகாயமடைந்துஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் 987 மி.மீ., மழையளவு பெய்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 368 மி.மீ., மழை பெய்துள்ளது.
இதனால், அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அணை முழுமையாக நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 266 கன அடியாக உள்ளது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் நேற்று வரை 21 ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அதேபோல உள்ளாட்சி அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள 90% சதவீதம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கவுதம்பேட்டை, பாரதிதாசன் நகர், பாரதிநகர், புதுப்பேட்டை சாலை, சிவராஜ்பேட்டை, சாமியார் கொட்டாய், வள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகள் மழை நீரினால் சூழப்பட்டுள்ளது. புதுப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கீழே 3 அடிக்கு மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாணியம்பாடி உழவர் சந்தையில் வியாபாரிகள் நேற்று காலை வழக்கமான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, உழவர்சந்தை கடைக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து உழவர் சந்தை கடைகள் மீது விழுந்தன. இதில், ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை பகுதியைச் சேர்ந்த இளவரசன் (40), ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த குமார் (42) ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர்.
உடனே, அவர்கள் மீட்கப்பட்டுவாணியம்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட் டனர். இந்த தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, வருவாய் கோட்டாட்சியர் காய்தரிசுப்பிரமணி, வட்டாட்சியர் மோகன் ஆகியோர் உழவர்சந்தை பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமார் மற்றும் இளவரசன் ஆகியோருக்கு அரசின் நிவாரணத்தொகையாக தலா 4,300 ரூபாயை ஆட்சியர் அமர்குஷ்வாஹா வழங்கி ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே, வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு அடுத்தசி.எல்.காலனியில் மழைநீர் புகுந்ததால் அவர்கள் வாணியம்பாடி - வளையாம்பட்டு சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்: ஆலங்காயம் 43.45 மி.மீ., ஆம்பூர் 57.8, வடபுதுப்பட்டு 51.2, நாட்றாம்பள்ளி 40.6, கேத்தாண்டப்பட்டி 31.3, வாணியம்பாடி 49.1, திருப்பத்தூர் 49.7, என மழை பதிவாகியிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT