நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் - விழிப்புணர்வுடன் பணிபுரிய வேண்டும் : அதிமுக-வினருக்கு பழனிசாமி அறிவுரை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினர் விழிப்புணர்வுடன் பணிபுரிய வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியதாவது:
வரும் ஜனவரி மாதத்துக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தேர்தல் பனிகளை அனைவரும் இப்போதிருந்தே தொடங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் நாம் மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துதர முடியும்.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. வியாபாரிகள் அச்சமன்றி வியாபாரம் செய்தனர். திமுக ஆட்சியில் வியாபாரிகள் பயந்து, பயந்து வியாபாரம் செய்கின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வினர் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயல்வதை தடுக்க அனைவரும் விழிப்போடு இருந்து அதனை முறியடிக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டும் நிலையில், சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அமைப்பு செயலாளர் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், எம்எல்ஏ-க்கள் சித்ரா, ராஜமுத்து, மணி, ஜெய்சங்கரன், நல்லதம்பி, சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
