

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையமும், கேரள மாநிலம் கொச்சி தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து திருப்பூர் மாவட்ட பெண் விவசாயிகள் உட்பட 20 பேருக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சியை வழங்கியது. திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் தலைமை வகித்து, தென்னை மரம் ஏறும் கருவியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் கதிரவன் கூறியதாவது: 6 நாள் பயிற்சி வகுப்பில், முதல் நாள் 15 அடி உயரம் வரை தென்னை மரம் ஏற பயிற்சி வழங்கப்பட்டது. அடுத்த 5 நாட்களில் 65 அடி உயரம் வரை தென்னை மரம் ஏற பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் திருப்பூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் 16 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என 20 பேர் பங்கேற்று பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 மதிப்புள்ள தென்னைமரம் ஏறும் கருவி இலவசமாக வழங்கப்பட்டது, என்றார்.
உதவி பேராசிரியர் தேன்மொழி, சமச்சீர் உர மேலாண்மை குறித்தும், உதவி பேராசிரியர் திலகம் விவசாய குழுக்கள் அமைத்தல், வேளாண் சந்தைகள் குறித்தும், உதவி பேராசிரியர் பி.ஜி.கவிதா தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்பாடுகள் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும், தென்னை மரத்தில் கிடைக்கும் பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டுதல் பற்றியும் பேசினார்கள். தென்னை மரம் ஏறும் பயிற்சியை ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் வழங்கினர்.