

மத்திய மண்டல ஐ.ஜி உத்தர வின்பேரில் திருச்சி மாவட்ட தனிப்பிரிவு போலீஸில் பணிபுரிந்த 21 பேர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக அந்த பணியிடங்களில் இளம் காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் நடைபெற வாய்ப்புள்ள குற்றச் செயல்கள் குறித்து முன்கூட்டியே விவரங்களைச் சேகரித்து அந்தந்த மாவட்ட எஸ்.பி.யின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக மாவட்டந்தோறும் தனிப்பிரிவு (ஸ்பெஷல் பிராஞ்ச்) செயல்பட்டு வருகிறது.
எஸ்.பி.யின் நேரடி கண்காணிப்பின்கீழ் இயங்கும் இப்பிரிவில் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு காவலர் நியமிக்கப்படுவர். இவர்கள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை இப்பிரிவில் பணிபுரியலாம்.
உள்ளூர் அளவில் செல்வாக்கு மிகுந்த பணியிடம் என்பதால், தங்க ளுக்குச் சாதகமான அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் சில காவலர்கள் தொடர்ந்து தனிப்பிரிவிலேயே 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர். இதையறிந்த ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன், மத்திய மண்டலத்திலுள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களிலும் 5 ஆண் டுகளுக்கு மேல் தனிப்பிரிவில் பணிபுரியும் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்து, அவர்களுக்கு பதில் இளம் காவலர்களை நியமிக்குமாறு உத்தரவிட்டார். இதன்படி தற்போது திருச்சி மாவட்ட தனிப்பிரிவில் பணிபுரிந்த 21 பேர் விடுவிக்கப்பட்டு, அவர்க ளுக்கு பதிலாக புதிதாக 21 இளம் காவலர்களை நியமித்து மாவட்ட எஸ்.பி பா.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இம்மாவட்டத்திலுள்ள 30 காவல் நிலையங்களில், 21 காவல் நிலையங்களுக்கான தனிப்பிரிவு போலீஸார் ஒரே சமயத்தில் மாற்றப்பட்ட விவகாரம் போலீ ஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவலர்களில் ஒரு தரப்பினர் இதை வரவேற்கும் நிலையில், அனுபவமிக்க தனிப்பிரிவு போலீஸாரை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் மாற்றினால், புதிதாக வரக்கூடியவர்களால் உடனடியாக உளவுத் தகவல்களை சேகரிக்க முடியுமா எனவும் மற்றொரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.