பிளஸ் 2 தனித் தேர்வர்கள் - மதிப்பெண் சான்றிதழ் பெற கால அவகாசம் :

பிளஸ் 2 தனித் தேர்வர்கள்  -  மதிப்பெண் சான்றிதழ் பெற கால அவகாசம்  :
Updated on
1 min read

பிளஸ் 2 பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் 2014 மார்ச் முதல் 2018 செப்டம்பர் வரை பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்களை பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2014 மார்ச் முதல் 2018 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தேர்வர்களால் நேரில் பெறப்படாமலும், அஞ்சல் மூலம் உரிய தேர்வர்களுக்கு அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ராமநாதபுரம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத் தாள்களாக மாற்றிடும் பொருட்டு, அரசிதழில் அறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும். இத்தருணத்தைப் பயன்படுத்தி ஒரு வெள்ளைத் தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தைக் குறிப்பிட்டு தேர்வெழுதிய பருவம், பிறந்த தேதி, பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு ரூ.45-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதிய உறை ஒன்றை இணைத்து, உதவி இயக்குநர், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், அறை எண்.83, 3வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (புதிய கட்டிடம்), ராமநாதபுரம் என்ற முகவரிக்கு வரும் 31.12.2021-ம் தேதிக்குள் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

2014 முதல் 2018 பருவத்திற்குப் பிறகு தேர்வெழுதிய பருவங்க ளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழையும் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியரின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in