Published : 06 Nov 2021 03:07 AM
Last Updated : 06 Nov 2021 03:07 AM

தீபாவளி பண்டிகையையொட்டி கேதார கவுரி விரதம் : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு

தீபாவளி பண்டிகையையொட்டி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் கேதார கவுரியம்மன் விரத சிறப்பு வழிபாட்டில் பெண்கள் ஈடுபட்டனர்.

கேதார கவுரி விரதம் என்பது தம்பதியர் பிரியாமல் அன்புடன் இறுதி வரை மகிழ்வுடன் வாழ பெண்கள் கடைபிடிக்கும் நோன்பாகும். கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் உள்ள நேதாஜி ரோடு கடைவாசல் மாரியம்மன் கோயில், சென்னை சாலை பெரியமாரியம்மன் கோயில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோயில், சந்திர மவுலீஸ்வரர் கோயில், ஜோதிவிநாயகர் கோயில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், பூசாரிப்பட்டி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் பெண்கள் விரதம் இருந்து அதிரசத்தைக் கொண்டு சென்று பூஜை செய்து வழிபட்டனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயிலில், 21 எண்ணிக்கை கொண்ட அதிரசம், வடை, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து சுவாமியை வணங்கி நோன்பை நிறைவு செய்தனர். இதில், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதேபோல், தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் கேதார கவுரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனையும், அலங்கார சேவையும் நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோயில், நெசவாளர் நகர் பாலமுருகன் கோயில், மற்றும் மகாலிங்கேஸ்வரர் கோயில், அன்னசாகரம் சிவசுப்பிரமணியன் சுவாமி கோயில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் மற்றும் அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், எஸ்.வி. ரோடு சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் கேதார கவுரியம்மன் விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x