Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

அரசு வேலை ஆசைகாட்டி மோசடி செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு தேடுதல் வேட்டை : பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க திருவள்ளூர் எஸ்பி அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி உலா வரும் மோசடி பேர்வழிகளின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்குமாறு எஸ்.பி. வருண்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

படித்து முடித்த பின் ஏதேனும் ஒரு அரசு வேலையில் சேருவது என்பது பெரும்பாலான இளைஞர்களின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. அதற்காக பல இளைஞர்கள் பல ஆண்டுகள் இரவு பகலாக கடுமையாக படித்து, தமது விருப்பு வெறுப்புகளை தவிர்த்து முறையான வழியில் அரசு வேலை பெற முயன்று வருகின்றனர்.

அதேவேளையில், சில இளைஞர்கள் தாமாகவோ அல்லது அவர்களது பெற்றோரின் வற்புறுத்தலின்பேரிலோ குறுக்குவழியில் அரசு வேலை பெற முயல்கின்றனர். அவர்களின் அந்த அரசு வேலை மோகத்தை சில மோசடி பேர்வழிகள் தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, அவர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் சமூகவலைதளங்கள் வாயிலாக இனம்கண்டு, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பணம் பறிக்கும் செயல்கள் தற்போது சமூகத்தில் அதிகமாக காணப்படுகின்றன.

இவ்வாறு குறுக்குவழியில் அரசு வேலை பெற, பணம் கொடுத்து ஏமாந்த பலர் சமூகத்தில் தமது கவுரவத்தை எண்ணி புகார் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறான மோசடி பேர்வழிகளைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிடில் அவர்கள் மேன்மேலும் பல நபர்களிடம் மோசடி செய்து, பல இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கி விடுவர்.

எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக உலாவரும் மோசடி பேர்வழிகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்பொருட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ‘Operation job Scam Clean Up’ எனும் சிறப்பு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

ஆகவே, மோசடி பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டவர்கள் அதுபற்றி உடனடியாக திருவள்ளூர் எஸ்.பி. வருண்குமாரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்குமாறு கோரப்படுகிறது. அவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, மோசடி பேர்வழிகளை கைது செய்து பாதிக்கப்பட்ட நபர்கள் நிவாரணம் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், எஸ்.பி. அலுவலகத்துக்கு நேரடியாக வந்து புகார் அளிக்க இயலாத நபர்கள் திருவள்ளூர் எஸ்பியின் பிரத்யேக அலைபேசி எண் 63799 04848-ஐ தொடர்பு கொண்டோ, வாட்ஸ்-ஆப் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல், இளைஞர்கள் தங்களது சீரிய முயற்சி, கடும் உழைப்பு, தகுதி, திறமையின் அடிப்படையில் முறையான வழியில் அரசு வேலைகளைப் பெற வேண்டும். அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டும் மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம். பெற்றோரும் அவர்களது பிள்ளைகளை தவறாக வழிநடத்த வேண்டாம் என திருவள்ளூர் எஸ்.பி. வருண்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x